Tuesday, September 19, 2017

thirunallaru thiruthandagam

6.20 திருநள்ளாறு திருத்தாண்டகம்


குறிப்பு: திருநள்ளாறு சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று
நளேச்சுரம், நாகவிடங்கபுரம், தர்ப்பாரண்யம் என்பவை இத்தலத்தின் ஏனையப் பெயர்களாம்

மகாபாரதத்தில் "நளன் வரலாறு" ஒரு கிளைக்கதையாக இடம்பெற்றுள்ளது, கலிபுருஷன் என்னும் சனியனால் பின்தொடரப்பெற்ற நளன் திருநள்ளாற்று இறைவனை தரிசிக்கும் பொருட்டு காதலுடன் ஆலயத்திற்குள் நுழையும் போது மேற்கொண்டு தொடர இயலாது "சிவபரம்பொருளுக்கு அஞ்சி" ஆலயவாசலில் சனியன் தங்கிவிட்ட தலம்

ஏழு தேவாரப்பாடல்கள் பெற்றுள்ள மூவராலும் போற்றப் பெற்ற பதி, விடங்கர் சன்னதிக்கு நேரே ஒய்யாரமாக நிற்கும் ஆலலசுந்தரர் பெருமான் திருமேணி அழகினுக்கோர் ஆபரணம்

அனல் வாதத்தில் வாடிப்போகாத பச்சைப் பதிகத்தைக் கொண்ட தலம்  தேவாரம் பாடிய மூவரும் தத்தம் பதிகத்தில் இத்தல இறைவனை முறையே நம்பெருமான், நம்பி, நம்பன் என்று குறித்தழைப்பதால் இதுபற்றி நம்பெருமான் என்பதே திருநள்ளாறு இறைவன் பெயர், தர்ப்பாரண்யேஸ்வரர் என்பது பிற்காலத்தில் வழங்கப் பட்டதாயிருக்கலாம் என்பர் அறிஞர்கள்

பிரமனின் தலைகளுள் ஒன்று ஏதோ தவறாகப் பேசியதால் இறைவன் அதனை கொய்துவிட்ட சிறப்பு செய்தியுடன் துவங்கும் அப்பரடிகள் திருத்தாண்டகத்தின் முதல் மூன்று பாடல்கள் இவை

பாடல் 1,2,3

ஆதிக்கண் நான்முகத்தில் ஒன்று சென்று
அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளால்
சேதித்த திருவடியைச் செல்ல நல்ல
சிவலோக நெறிவகுத்துக் காட்டுவானை
மாதிமைய மாதொரு கூறாயினானை
மாமலர்மேல் அயனோடு மாலுங் காணா
நாதியை நம்பியை நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே.

படையானைப் பாசுபத வேடத்தானைப்
பண்டனங்கற் பார்த்தானைப் பாவமெல்லாம்
அடையாமைக் காப்பானை அடியார் தங்கள்
அருமருந்தை ஆவாவென்று அருள்செய்வானைச்
சடையானைச் சந்திரனைத் தரித்தான் தன்னைச்
சங்கத்த முத்தனைய வெள்ளை ஏற்றின்
நடையானை நம்பியை நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.

படஅரவம் ஒன்றுகொண்டு அரையிலார்த்த
பராபரனைப் பைஞ்ஞீலி மேவினானை
அடலரவம் பற்றிக் கடைந்த நஞ்சை
அமுதாக உண்டானை ஆதியானை
மடலரவம் மன்னுபூங் கொன்றை யானை
மாமணியை மாணிக்காய்க் காலன் தன்னை
நடலரவஞ் செய்தானை நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.

பொருள்

ஆதி அந்தணன் எனப்படும் பிரமனுடைய முகங்களில் ஒன்று உண்மை அல்லாத சொல்லினைக் கூற அம்முகத்தைத் தன் கையையே வாளாகக் கொண்டு போக்கிய வயிரவனாய் , அடியார்கள் அடைவதற்கு மேம்பட்ட சிவலோகம் அடையும் வழியைக் காட்டுவானாய் , விரும்பத்தக்க பார்வதி பாகனாய் , தாமரை மலர் மேல் உள்ள பிரமனும் , திருமாலும் காண முடியாத தலைவனாய்க் குண பூரணனாய்த் திருநள்ளாற்றில் உகந் தருளியிருக்கும் பெருமானை அடியேனாகிய நான் தியானம் செய்து துன்பங்களிலிருந்து நீங்கிய செயல் மேம்பட்டதாகும் .

பலபடைக்கலங்களை உடையவனாய்ப் பாசுபதமதத்தில் கூறப்படும் வேடத்தனாய் , முற்காலத்தில் மன்மதன் சாம்பலாகுமாறு அவனை நெற்றிக்கண்ணால் நோக்கியவனாய் , அடியவர்களுக்கு அமுதமாய் அவர்கள் நிலைக்கு ஐயோ என்று இரங்கி அருள் செய்பவனாய்ச் சடையை உடையவனாய் , காளையில் செல்பவனாய்க் குண பூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று 


படமெடுக்கும் பாம்பு ஒன்றனை இடையில் இறுகக்கட்டிய , மேலும் கீழுமாய் நிற்பவனை , பைஞ்ஞீலி என்ற தலத்தை உகந்தருளியவனை , வலிய பாம்பினைக்கொண்டு கடைந்த போது தோன்றிய விடத்தை அமுதம்போல் உண்டவனை , எல்லோருக்கும் முற்பட்டவனை , இதழ்களிலே வண்டுகளின் ஒலி நிறைந்த கொன்றைப் பூவினை அணிந்தவனை , சிறந்த இரத்தினம் போன்று கண்ணுக்கு இனியவனை . மார்க்கண்டேயன் என்ற பிரமசாரியைக் காத்தற்பொருட்டுக் காலனைத் துன்புறுத்தத் தன் கால் சிலம்பு ஒலிக்க அவனை உதைத்தவனை , நள்ளாற்றில் உகந்தருளி யிருப்பவனை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.