Tuesday, September 19, 2017

piraiyum paampum udai peruman

 5.92 காலபாசக் குறுந்தொகை



குறிப்பு: காலன், கூற்றுவன், யமன், நமன் என்றெல்லாம் அழைக்கப் படும் தருமராசனின் தூதுவர்கள் உயிர்களின் பிரார்த்துவ வாழ்வு முடிகையில் சொர்க்க நரகங்களில் சேர்ப்பதற்காக வந்து பாசக்கயிற்றில் கட்டி இழுத்து செல்வார்கள்

ஆனால் யமனுடைய இந்த அதிகாரம் "திருநீறு பூசிய சிவநேயச் செல்வர்களிடம் செல்லுபடியாகாது"

என் அடியான் உயிரை வவ்வேல் என்று அடல்கூற்று உதைத்தவன் நம் இறைவன் அவன் தம் தமர்களாகிய சிவனடியார்கள் கடுநரகில் வீழ்வதில்லை, ஒரு தரம் "சிவாயநம" என்று சொன்னவர்க்கே சாலோக முக்தி கிடைக்கும் என்னும் போது காலதூதுவர்களுக்கு அடியார்களிடம் என்ன வேலை இருக்க முடியும்!!??

மீறிச் சென்று அடியார்களை துன்புறுத்தினால் யமன் உதைவாங்கி உருண்டோடி ஒழிந்து போனதை நினைத்துப் பாருங்கள் என்று அப்பர் பெருமான் காலதூதுவர்களுக்கு அறிவுரை வழங்குவதாக இக்குறுந்தொகை அமைவதால் இதனை "காலபாசக் குறுந்தொகை" என்கிறோம்

நமன் தூதுவீர்!! என்று எமதூதர்களை அழைத்து அருகே அமர வைத்துக் கொண்ட அப்பரடிகள். இருந்து கேள்மின்!! இன்னுங் கேள்மின்!! மற்றுங் கேள்மின்!! என்று தங்கவைத்து சிவனடியார்கள் இருக்கும் திசைக்குக் கூட சென்றுவிடாதீர்கள் பின் உங்கள் தலைவன் உதை வாங்கியதைப் போல வாங்க வேண்டிவரும் என்று எச்சரித்து இப்பாடல்களை நயமுடன் பாடுகிறார்

பாடல் 3-9

கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்
சீர்கொள் நாமஞ் சிவன் என்று அரற்றுவார்
ஆர்கள் ஆகிலுமாக அவர்களை
நீர்கள் சாரப் பெறீர் இங்கு நீங்குமே.

சாற்றினேன் சடை நீண்முடிச் சங்கரன்
சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி
ஆற்றவுங் களிப்பட்ட மனத்தராய்ப்
போற்றி என்று உரைப்பார் புடை போகலே.

இறையென் சொல் மறவேல் நமன் தூதுவீர்
பிறையும் பாம்பும் உடைப்பெருமான் தமர்
நறவம் நாறிய நல்நறுஞ் சாந்திலும்
நிறைய நீறணிவார் எதிர்செல்லலே

வாம தேவன் வளநகர் வைகலும்
காம மொன்று இலராய்க்கை விளக்கொடு
தாமம் தூபமும் தண்நறுஞ் சாந்தமும்
ஏமமும் புனைவார் எதிர் செல்லலே

படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன்மின் நமது ஈசனடியரை
விடைகொள் ஊர்தியினான் அடியார்குழாம்
புடைபுகாது நீர் போற்றியே போமினே.

விச்சையாவதும் வேட்கைமை யாவதும்
நிச்சல் நீறணி வாரை நினைப்பதே
அச்சமெய்தி அருகணையாது நீர்
பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே.

இன்னங் கேண்மின் இளம்பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்துடன் ஏத்துவார்
மன்னும் அஞ்செழுத்தாகிய மந்திரம்
தன்னில் ஒன்று வல்லாரையுஞ் சாரலே.

பொருள்

யமதூததர்களே!!கார்காலத்திலே மலர்கின்ற கொன்றையின் மணமிக்க மலர்களை அணிந்தவனது பெருமை கொண்ட திருநாமமாகிய சிவன் என்று அரற்றுவார் ஆராயினும் ஆக ; அவர்களை நீர் சாரப்பெறாதீர் ; நீங்குவீராக .

சடையோடு கூடிய நீள்முடியுடைய சங்கரனும் , காமனைச் சினந்து எரிசெய்தவனுமாகிய பெருமான் சேவடியைப் போற்றி என்று மிகவும் களிப்புடைய உள்ளத்தவராய் உரைப்பார் பக்கம் நீவிர் செல்லேல் .

நமன் தூதுவர்களே ! என்சொல்லைச் சிறிதும் மறவாதீர் ; பிறையும் பாம்பும் உடையான் தமர்களாகிய தேன் நறுமணம் வீசும் நல்ல நறுவிய சாந்தினைவிட நிறையத் திருநீறு பூசும் அடியவர் எதிரில் கூட நீங்கள் போய்விடாதீர்கள்

வாமதேவனாகிய சிவபெருமான் வளநகராந் திருக்கோயிலில் நாள்தோறும் மனத்தின்கண் வேறொரு விருப்பமும் இல்லாதவராய்க் கைவிளக்கும் , தூபமும் , மாலையும் , தண்ணிய நறுவிய சாந்தமும் , பிற வாசனைப் பொருள்களும் புனைவார் எதிர் நீவிர் செல்லேல் .

படைக்கலமும் பாசக்கயிறும் பற்றியகையை உடைய தூதுவர்களே ! நமது ஈசன் அடியரை அடையாதீர் ; இடபத்தை
ஊர்தியாகக்கொண்ட இறைவன் அடியார் குழாத்தின் புடை நீர் போகாமல் அவர்களை வழிபட்டுப் போவீராக .

வித்தையாவதும் , விருப்பத்துக்குரிய தன்மையும் ஆவதும் நாள்தோறும் திருநீறணியும் மெய்யடியாரை நினைப்பதே ; அச்சம் கொண்டு , பிச்சை புகும் பெருமானின் அன்பர்களை நீர் பேணுவீராக .

இன்னும் கேட்பீராக ; இளம் பிறையினைச் சூடிய அருளரசனாகிய சிவபெருமான் திருவடியோடுகூடிய உள்ளத்துடன் ஏத்தி வழிபடுவார்களையும் நிலைபெற்ற திருவைந்தெழுத்தாகிய மந்திரத்தில் ஒன்று வல்லவரையும் நீவிர் சாரவேண்டா .


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.