Tuesday, September 19, 2017

manthiramum thanthiramum marunthumaagi

6.54 திருப்புள்ளிருக்கு வேளூர் திருத்தாண்டகம்

குறிப்புபுள் ஆகிய சடாயு இருக்காகிய வேதம் வேள் ஆகிய முருகன் ஊராகிய சூரியன் வழிபட்ட தலமாதலின் புள்ளிருக்கு வேளூர் ஆயிற்று

தரணியெங்கும் பிறவிநோயால் பீடிக்கப்பட்ட உயிர்களுக்கு பிணிதீர்க்கும் மகாவைத்தியனான சிவபரம்பொருள் புற்றுருவில் எழுந்தருளியுள்ள தலம்

செல்வமுத்துக்குமர சுவாமி என்னும் அறுமுகச்செவ்வேள் இத்தலத்தின் விசேடமூர்த்தியாவார்

செடியாய உடல் தீர்ப்பான் தீவினைக்கு ஓர் மருந்தாவான் என்பது புகலிப்பிள்ளையர் வாக்கு

கள்ளார்ந்த பூங்கொன்றை என்னும் பாடலில் சிவபரம்பொருளை சாடாயு சம்பாதி பூசித்த திறங்களையும் சீதாபிராட்டியிடம் அத்துமீறிய இராவணனை இப்பறவையோர் பொருதழித்த மகத்துவத்தையும் வியந்தும் பாடியிருப்பார் சம்பந்தப்பெருமான்

ஆண்டானை என்று துவங்கும் அப்பரடிகளின் தாண்டக வரிகள் தமிழ் நூல்களுக்கு ஓர் மணிமகுடமாகத் திகழும் வரிகள்

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி தீராநோய் தீர்த்தருள வல்லான்தன்னை புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே என்று பாடும் அப்பர் பெருமானது வரிகள் வைரத்தில் பதித்த பொன்னெழுத்துக்களாம்

இத்தாண்டகத்தின் முதல் மூன்று பாடல்கள் இவை

பாடல் 1,2,3

ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு
அடியோடு முடியயன் மாலறியா வண்ணம்
நீண்டானை நெடுங்களமா நகரான் தன்னை
நேமிவான் படையால் நீளுரவோன் ஆகங்
கீண்டானைக் கேதாரம் மேவி னானைக்
கேடிலியைக் கிளர்பொறி வாளரவோ டென்பு
பூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே


சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தையுள்ளே
திகழ்ந்தானைச் சிவன்தன்னைத் தேவதேவைக்
கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக்
குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம்
பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பு ஒன்றில்லாப்
பெம்மானைக் கைம்மாவினுரிவை பேணிப்
போர்த்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே

பத்திமையாற் பணிந்தடியேன் தன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித்தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை
எம்மானை என்னுள்ளத்துள்ளே ஊறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை
அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே


பொருள்

அடியேனை அடிமையாகக் கொண்டு ஆண்டவனாய், திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் அறியா வண்ணம் அனற்பிழம்பாய் நீண்டவனாய், நெடுங்களக் கோயிலில் உறைவானாய், சக்கரப்படையால் பேராற்றலுடைய சலந்தரனுடைய மார்பினைப் பிளந்தவனாய், கேதாரத்தில் உறைவோனாய், ஒரு காலத்தும் அழிதல் இல்லாதவனாய், ஒளி வீசும் புள்ளிகளை உடைய பாம்போடு எலும்பினை அணிகலனாகப் பூண்டவனாகிய புள்ளிருக்கு வேளூர்ப் பெருமானைத் துதிக்காமல் பல நாள்களை வீணாகக் கழித்து விட்டேனே

அடியேனுடைய உள்ளத்தில் சிறப்பாகக் கிட்டினவனாய் விளங்குகின்ற சிவனாகிய தேவதேவனாய், மிக நுண்ணியனாய், கொடிய நீண்ட வேலை ஏந்தி வந்த கூற்றுவனைத் திருவடியால் உதைத்து, முனிவனாகிய மார்க்கண்டேயன் கொண்ட யம பயத்தைப் போக்கியவனாய், பிறப்பு இறப்பு இல்லாத தலைவனாய், யானைத் தோலை விரும்பிப் போர்த்தவனாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

அடியேன் பக்தியோடு வணங்கித் தன்னைப் பலநாளும் பாமாலைகளால் போற்றுமாறு பழக்கியவனாய், எல்லாத்தெய்வங்களும் துதிக்கும் தெய்வமாய், என் தலைவனாய், என் உள்ளத்து ஊறும் தேன் அமுதம் பசுப்பால், இனிய கரும்பு என்பன போன்று இனியனாய்ப் பகைவரை அழிப்பவனாய், ஆதிக் கடவுளாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாமல் ஆற்ற நாள் போக்கினேனே.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.