Friday, November 30, 2018

உள்ளத்துள்ளே ஒளிரும் சோதி ஈசன்

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்



பாடல் எண் : 13
முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனைக் காலமும் ஏத்துமின் ஈசனை
நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதி யதுவிரும் பாரே .

வீடாகிய முடிநிலைப் பயனாயும், அப்பயனுக்கு நேர்வாயிலாகிய ஞானமாயும், அந்த ஞானத்தை முதற்கண் கேள்வி யால் உணர்த்தும் முத்தமிழின் ஒலியாயும் உள்ள சிவபெருமானையே அறிஞர் எத்துணைக் காலமாயினும் ஒழியாது துதித்து நிற்பர். அங்ஙனம் துதிக்கின்ற துதியில் அவன் தன்னுள்ளே நெய்யைக் கொண்டிருத்தலால் தன்னைப் பருகுகின்றவர்கட்கு இனிக்கின்ற பால்போல அவன் இனிப்பான். ஆகவே அறிவில் இனிக்கின்ற அறிவாயுள்ள அவனை அறிவுடையோர் விரும்பாமல் இருப்பரோ?

Lord Stands as Ghee in Milk

He is Mukti, Jnana and Nada
That in the three branches of Tamil resound,
Thus they praise the Lord
Through time unending;
As the ghee within milk
The Pure One within them stands;
That Light they seek not, and love not.

சிவனை நினைவார்க்கு வினை இல்லை

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசை


பாடல் எண் : 6
ஏறுடை யாய்இறை வாஎம் பிரான்என்று
நீறிடு வார்அடியார் நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சடை யண்ணல் இவரென்று
வேறணி வார்க்கு வினையில்லை தானே

இடபத்தை ஊர்தியாகவும், கொடியாகவும் உடையவனே! இறைவா! எங்கள் பெருமானே` என்று சிவனை எப் பொழுதும் துதித்து அவனது அருள் வடிவாகிய திருநீற்றை அன்புடன் அணிகின்றவர்கள் அவனுக்கு அடியராவார்கள், அவர்களை `இவர்களே நிலவுலகில் காணப்படுகின்ற தேவர்கள்` என்றும், `சிவபெருமான்` என்றும் கருதி அவரை மக்களின் வேறாக வைத்து வழிபடுகின்றவர்கட்கு அவரால் முன்பு செய்யப்பட்டுக் குவிந்து கிடக்கின்ற வினைகள் கெட்டொழிதல் உறுதி.

Siva Jnanis are Gods on Earth

``You, the Divine Bull ride,
My Lord, My God``
—Those who wear the holy ashes saying thus;
Verily are like Devas on earth;
They that worship them as the Lord Himself,
—Who the Ganga on His russet matted locks wears,
Will have their Karmas end consummated.

பாடிப் பணியுங்கள் பரமனை

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்

பாடல் எண் : 8
கூடியும் நின்றும் தொழுதெம் இறைவனைப்
பாடி உளேநின்று பாதம் பணிமின்கள்
ஆடி உளேநின் றறிவுசெய் வார்கட்கு
நீடிய ஈற்றுப் பசுவது வாமே .

எங்கள் சிவபெருமானை அவன் அடியவரோடு கூடியும், தனித்தும், பாடியும், ஆடியும் வணங்குவதுடன் உள்ளத்திலே யும் அவனது திருவடிகளை நினைந்து அடிபணியுங்கள். ஏனெனில், உள்ளத்திலே நினைந்து பணிபவர்கட்குக் கன்றையீன்ற பசு அக் கன்றைவிட்டுப் பிரியாதது போலக் கரவாது விளங்கி அருள் செய்வான்.

Lord Yearns After Devotees

Praise Our Lord
In devotion congregational;
Sing His praise within,
And at His Feet adore;
Dance within and know Him;
Then He yearns after you,
Like the cow after its calf.

Thursday, November 29, 2018

தீதும் நன்றும் அவன் அருள் ஆகும்

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்


பாடல் எண் : 6
போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள்
ஆகின்ற போதும் அரன்அறி வானுளன்
சாகின்ற போதும் தலைவனை நாடுமின்
ஆகின்ற அப்பொருள் அக்கரை யாகுமே .

நீவிர் போகின்ற போக்கிலே உங்களைப் போக விட்டுத் தானும், அப்போக்கிற்குத் துணையாய் உடன் வருகின்ற முதற்பொருள் சிவனே. அவன் அவ்வாறு விடுதலும், உடன் புகுதலும் நீவிர் உண்மையை உணர்தற்கு உரிய காலம் வருவதை அறிதற்காகவே யாம். ஆகையால், வாழ்கின்ற பொழுது மட்டுமின்றிச் சாகின்ற பொழுதும் அவனை நினையுங்கள். ஏனெனில், அவனே பிறவியாகிய கடலுக்கு அப்பால் உள்ள கரையாவான்.

Lord is Your Redemption

The Lord who enters into you
And walks with you in the life
Knows sure when you in holiness ripen;
Seek the Lord
Even on the eve of your death;
He will your Redemption be
For the life to be.

Tuesday, November 27, 2018

இருக்கின்ற போது இறைவனை எண்ணுக

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்

பாடல் எண் : 7
பறக்கின்ற ஒன்று பயன்உற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
பிறப்பொன் றிலாமையும் பேருல காமே

கூட்டில் சிறிது போது தங்கியிருந்து பின்பு இரையை நாடி அக்கூட்டைவிட்டுப் பறந்து போகின்ற பறவையைப் போல உடம்பில் சிறிது காலம் வாழ்ந்து பின்பு அவ்வாழ்வினும் வேறான பயனை நாடி அவ்வுடம்பை விட்டு ஓடுகின்ற உயிர், உண்மையாகவே தான் அடையத்தக்க பயனை அடைய வேண்டின் உடம்பை விட்டுப் பிரிகின்ற காலத்திலும் சிவனை மறவாமல் நினைக்கும். அவ்வாறு நினைத்தால் எல்லாச் சிறப்பினும் மேம்பட்ட சிறப்பாகிய, சிவ ஞானத்தின்வழி சிவகதியைச் சேரும் இனி அச்சிவகதிதான், ஏனையுலகங்கள் எல்லாவற்றையும் விடப் பெரியதாகிய உலகமும், அதனையும் கடந்த நிலைமையும் ஆகும்.

Think of Lord like Your Last Days

If your fleeting life
Is its good goal to attain,
Even on death-bed
Think of the Lord;
Then will follow Siva`s grace,
No more birth will be;
The heavenly world will yours be.