Thursday, January 12, 2017

poovalli koyyaamo

Thirumurai 8. 13 திருவாசகம்-திருப்பூவல்லி



பாடல் எண் : 1
இணையார் திருவடிஎன்
    தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள்
    அத்தனையுந் துறந்தொழிந்தேன்
அணையார் புனற்றில்லை
    அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடிப்
    பூவல்லி கொய்யாமோ

இரண்டாகிய அரிய திருவடியை, என் தலையின் மீது வைத்தவுடன், இதுவரையில் துணையென்று நினைத்திருந்த உறவினரெல்லாரையும், விட்டு நீங்கினேன். கரைகோலித் தடுக்கப் பட்ட நீர் சூழ்ந்த தில்லைநகர்க் கண்ணதாகிய, அம்பலத்தில் நடிக்கின்ற, நமதுபிறவிக் கடலுக்கு ஓர் மரக்கலம் போல்பவனாகிய சிவபெரு மானது பெருமையைப் புகழ்ந்து பாடி அல்லி மலர்களைப் பறிப்போம்.

பாடல் எண் : 2
எந்தைஎந் தாய்சுற்றம்
    மற்றுமெல்லாம் என்னுடைய
பந்தம் அறுத்தென்னை
    ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான்
அந்த இடைமருதில்
    ஆனந்தத் தேனிருந்த
பொந்தைப் பரவிநாம்
    பூவல்லி கொய்யாமோ

எனது தந்தையும், எனது தாயும் உறவினரும், மற்றெல்லாப் பொருள்களும் என்னுடைய பிறவிக் கட்டைச் சேதித்து, என்னை ஆண்டருளின, பாண்டிப் பிரானே, ஆதலால் அந்தத் திருவிடை மருதூரின்கண், இன்பத்தேன் தங்கியிருந்த பொந்தினைத் துதித்து நாம் பூவல்லி கொய்யாமோ.

பாடல் எண் : 3
நாயிற் கடைப்பட்ட
    நம்மையுமோர் பொருட்படுத்துத்
தாயிற் பெரிதுந்
    தயாவுடைய தம்பெருமான்
மாயப் பிறப்பறுத்
    தாண்டானென் வல்வினையின்
வாயிற் பொடியட்டிப்
    பூவல்லி கொய்யாமோ

நாயினுங் கடையான, எங்களையும், ஓர் பொருளாக்கி, தாயினும், மிகவும் தயையுடையவனான, தம்பிரான், என் வலிய இருவினைகளின் வாயில், புழுதியைக் கொட்டி, மாயப்பிறவியைச் சேதித்து ஆண்டருளினன், ஆதலால் பூவல்லி கொய்யாமோ.

பாடல் எண் : 4
பண்பட்ட தில்லைப்
    பதிக்கரசைப் பரவாதே
எண்பட்ட தக்கன்
    அருக்கனெச்சன் இந்துஅனல்
விண்பட்ட பூதப்
    படைவீர பத்திரரால்
புண்பட்ட வாபாடிப்
    பூவல்லி கொய்யாமோ

மதிப்புப் பெற்ற தக்கனும், சூரியனும், எச்சன் என்பவனும், சந்திரனும், அக்கினியும், அலங்கரித்தலமைந்த, தில்லை நகர்க்கு இறைவனாகிய சிவபெருமானை, துதியாதவர்களாய், மேன்மை பொருந்திய பூதப்படையையுடைய, வீரபத்திரக் கடவுளால் காயப்பட்ட விதத்தை எடுத்துப்பாடி, பூவல்லி கொய்யாமோ.

பாடல் எண் : 5
தேனாடு கொன்றை
    சடைக்கணிந்த சிவபெருமான்
ஊனாடி நாடிவந்
    துள்புகுந்தான் உலகர் முன்னே
நானாடி ஆடிநின்
    றோலமிட நடம்பயிலும்
வானாடர் கோவுக்கே
    பூவல்லி கொய்யாமோ

தேன் பொருந்திய கொன்றை மலர் மாலையை, சடையின்கண் தரித்த சிவபிரான் பலகால் மானுடவுடம்பெடுத்து வந்து, உலகத்தாருக்கு எதிரில் என் மனத்தில் புகுந்தான். அதனால் நான் ஆடியாடி நின்று, முறையிட, நடனம் செய்கிற தேவர் பிரானுக்கே பூவல்லி கொய்யாமோ.

பாடல் எண் : 6
எரிமூன்று தேவர்க்
    கிரங்கியருள் செய்தருளிச்
சிரமூன் றறத்தன்
    திருப்புருவம் நெரித்தருளி
உருமூன்று மாகி
    உணர்வரிதாம் ஒருவனுமே
புரமூன் றெரித்தவா
    பூவல்லி கொய்யாமோ

மும்மூர்த்திகளாகி, அறிதற்கரிய பொருளாயுள்ள ஒருவனுமே, முத்தீயின் வழியாக அவியை ஏற்கின்ற தேவர்களுக்கு, இரங்கி அருள் செய்து, திரிபுரத்தவர்கள் தலை சுற்றி விழும்படி, தனது திருப்புருவத்தை வளைத்தருளி, மூன்று புரங்களையும் எரித்த விதத்தைப் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ?

பாடல் எண் : 7
வணங்கத் தலைவைத்து
    வார்கழல்வாய் வாழ்த்தவைத்
திணங்கத்தன் சீரடியார்
    கூட்டமும்வைத் தெம்பெருமான்
அணங்கொ டணிதில்லை
    அம்பலத்தே ஆடுகின்ற
குணங்கூரப் பாடிநாம்
    பூவல்லி கொய்யாமோ

எம் இறைவன் தன்னை வணங்கும் பொருட்டு, எனக்குச் சிரசை அமைத்து, தன் பெரிய திருவடியைத் துதிக்கும் பொருட்டு எனக்கு வாயை அமைத்து அடியேன் நட்பமையும் பொருட்டு, தன் சிறப்பமைந்த அடியார் குழாத்தையும் அமைத்து அழ கோடு, அழகாகிய தில்லையம்பலத்தில் நடனம் செய்கின்ற கல்யாண குணத்தை மிகுதியாகப் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ?

பாடல் எண் : 8
நெறிசெய் தருளித்தன்
    சீரடியார் பொன்னடிக்கே
குறிசெய்து கொண்டென்னை
    ஆண்டபிரான் குணம்பரவி
முறிசெய்து நம்மை
    முழுதுடற்றும் பழவினையைக்
கிறிசெய்த வாபாடிப்
    பூவல்லி கொய்யாமோ

எனக்கு நல்வழியை உண்டாக்கியருளி, தன் சிறப்பை உடைய அடியார்களுடைய பொன்னடிகளுக்கே, இலக் காக்கிக் கொண்டு, என்னை ஆண்டருளின இறைவனது, மங்கள குணங்களைப் புகழ்ந்து, எம்மை முழுமையும் அடிமையாக்கி வருத்து கின்ற, பழவினைகளைப் பொய்யாக்கின (இல்லையாகச் செய்த) விதத்தைப் புகழ்ந்து பாடிப் பூவல்லி கொய்யாமோ?

பாடல் எண் : 9
பன்னாட் பரவிப்
    பணிசெய்யப் பாதமலர்
என்னாகம் துன்னவைத்த
    பெரியோன் எழிற்சுடராய்க்
கன்னா ருரித்தென்னை
    யாண்டுகொண்டான் கழலிணைகள்
பொன்னான வாபாடிப்
    பூவல்லி கொய்யாமோ

யான், அநேகநாள் துதித்து, பணிவிடை செய்யும் படி, தன் திருவடி மலரை, என் மனத்தில் பொருந்த அமைத்த பெருமையையுடையான், அழகிய சோதியாகி, முற்படக் கல்லில் நார் உரித்த பிறகு என்னை ஆண்டருளினவனுடைய இரண்டு திருவடிகள் அழகியனவாயிருந்த விதத்தைப் புகழ்ந்து பாடிப் பூவல்லி கொய்யாமோ?

பாடல் எண் : 10
பேராசை யாமிந்தப்
    பிண்டமறப் பெருந்துறையான்
சீரார் திருவடிஎன்
    தலைமேல் வைத்தபிரான்
காரார் கடல் நஞ்சை
    உண்டுகந்த காபாலி
போரார் புரம்பாடிப்
    பூவல்லி கொய்யாமோ

பேராசையால் உண்டாகிய இந்த உடம்பின் தொடர்பு அற்றுப்போம்படி, திருப்பெருந்துறையை உடையானும், சிறப்பமைந்த திருவடியை, என்சிரசின் மேல் வைத்த பெருமானும், கருமை நிறைந்த பாற்கடலில் தோன்றிய நஞ்சை உண்டு மகிழ்ந்த காபாலியும் ஆகிய சிவபெருமானது போர்க்கிலக்காயிருந்த முப்புரத்தின் வரலாற்றைப் பாடிப் பூவல்லி கொய்யாமோ?

பாடல் எண் : 11
பாலும் அமுதமுந்
    தேனுடனாம் பராபரமாய்க்
கோலங் குளிர்ந்துள்ளங்
    கொண்டபிரான் குரைகழல்கள்
ஞாலம் பரவுவார்
    நன்னெறியாம் அந்நெறியே
போலும் புகழ்பாடிப்
    பூவல்லி கொய்யாமோ

பாலையும், அமிர்தத்தையும், தேனையும் ஒத்த பராபரப் பொருளாகி, குளிர்ச்சியாகிய திருவுருக் கொண்டு வந்து, என் மனத்தைக் கவர்ந்து கொண்ட இறைவனது ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்த திருவடிகளை உலகத்தில் வழிபடுவோர்களுடைய நல்வழி யாகி, அவ்வழியையே நிகர்ப்பதாகிய, இறைவனது புகழைப் பாடிப் பூவல்லி கொய்யாமோ?.

பாடல் எண் : 12
வானவன் மாலயன்
    மற்றுமுள்ள தேவர்கட்கும்
கோனவ னாய் நின்று
    கூடலிலாக் குணக்குறியோன்
ஆன நெடுங்கடல்
    ஆலாலம் அமுதுசெய்யப்
போனகம் ஆனவா
    பூவல்லி கொய்யாமோ

இந்திரன், திருமால், பிரமன் மற்றுமுண்டாகிய தேவர்கள் ஆகிய எல்லார்க்கும் அரசனாயிருந்தும், ஒருவரும் சென்றணுக வொண்ணாத குணங்குறிகளை உடையவன், நெடியபாற் கடலிலுண்டாகிய ஆலகால விஷத்தைத் திருவமுது செய்யவே, அது உணவாயினவாறென்ன வியப்பு என்று பூவல்லி கொய்யாமோ?

பாடல் எண் : 13
அன்றால நீழற்கீழ்
    அருமறைகள் தானருளி
நன்றாக வானவர்
    மாமுனிவர் நாள்தோறும்
நின்றார ஏத்தும்
    நிறைகழலோன் புனைகொன்றைப்
பொன்றாது பாடிநாம்
    பூவல்லி கொய்யாமோ

அக்காலத்தில் கல்லாலின் நீழலில் எழுந்தருளி, அருமையாகிய வேதப் பொருள்களை அருளிச் செய்து, தேவர்களும் பெரிய முனிவர்களும் தினந்தோறும் நிலைத்திருந்து வாயாரத் துதிக் கும்படியான நிறைகழலை அணிந்த திருவடிகளை உடையோன் அணிந்த கொன்றைப் பூவின் சிறப்பைப் புகழ்ந்து பாடி நாம் பூவல்லி கொய்யாமோ?

பாடல் எண் : 14
படமாக என்னுள்ளே
    தன்னிணைப்போ தவையளித்திங்
கிடமாகக் கொண்டிருந்
    தேகம்பம் மேயபிரான்
தடமார் மதில்தில்லை
    அம்பலமே தானிடமா
நடமாடு மாபாடிப்
    பூவல்லி கொய்யாமோ

என் மனமே எழுதுபடமாகத் தன்னிரண்டு திருவடி மலர்களைப் பதியவைத்து, இவ்விடத்தை இடமாகக் கொண்டிருந்தும் திருவேகம்பத்திலும் பொருந்தியிருந்த பெருமான், விசாலம் பொருந்திய மதில்சூழ்ந்த தில்லையம்பலத்தையே இடமாகக் கொண்டு, நடனம் செய்யும் முறைமையைப் பாடிப் பூவல்லி கொய்யாமோ?

பாடல் எண் : 15
அங்கி அருக்கன்
    இராவணனந் தகன்கூற்றன்
செங்கண் அரிஅயன்
    இந்திரனுஞ் சந்திரனும்
பங்கமில் தக்கனும்
    எச்சனுந்தம் பரிசழியப்
பொங்கியசீர் பாடிநாம்
    பூவல்லி கொய்யாமோ

அக்கினித் தேவனும், சூரியனும், இராவணனும், சனியும், நமனும், செந்தாமரைக் கண்ணனாகிய திருமாலும், பிரமனும், தேவர்கோனும், சந்திரனும், அழிவற்ற தக்கனும், எச்சன் என்பவனும், தமது தன்மையழியும்படி, கோபித்த சிறப்பைப் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ?

பாடல் எண் : 16
திண்போர் விடையான்
    சிவபுரத்தார் போரேறு
மண்பால் மதுரையிற்
    பிட்டமுது செய்தருளித்
தண்டாலே பாண்டியன்
    தன்னைப் பணிகொண்ட
புண்பாடல் பாடிநாம்
    பூவல்லி கொய்யாமோ

திடமான, போர்க்குரிய இடபத்தை உடையவன், சிவநகரத்தார்ப் போரேறாயிருப்பவன், அவன் மண்ணுலகில் மதுரைப் பதியில், பிட்டினைத் திருவமுது செய்தருளி, பிரப்பந் தண்டினால் பாண்டியன் தன்னைப் பணிகொண்டதனால் உண்டாகிய, புண்ணைப் பற்றிய பாடலைப் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ?

பாடல் எண் : 17
முன்னாய மாலயனும்
    வானவருந் தானவரும்
பொன்னார் திருவடி
    தாமறியார் போற்றுவதே
என்னாகம் உள்புகுந்
    தாண்டுகொண்டான் இலங்கணியாம்
பன்னாகம் பாடிநாம்
    பூவல்லி கொய்யாமோ

தேவர்களுக்குள் முன்னவர்களாகிய திருமாலும், பிரமனும், தேவர்களும், அவுணரும் பொன்போலும் அரிய திரு வடியைத்தாம் அறியமாட்டார்கள். அப்படியிருக்க எம்மால் வணங்கப் படுவதோ? என் மனத்தினுள்ளே புகுந்து என்னை ஆண்டு கொண்ட வனுடைய, ஆபரணமாகிய பல நாகங்களைப் புகழ்ந்து பாடி நாம் பூவல்லி கொய்யாமோ?

பாடல் எண் : 18
சீரார் திருவடித்
    திண்சிலம்பு சிலம்பொலிக்கே
ஆராத ஆசையதாய்
    அடியேன் அகமகிழத்
தேரார்ந்த வீதிப்
    பெருந்துறையான் திருநடஞ்செய்
பேரானந் தம்பாடிப்
    பூவல்லி கொய்யாமோ

சிறப்புப் பொருந்திய திருவடி மேலணிந்த, திடமான சிலம்புகள், ஒலிக்கின்ற ஒலிக்கே, வெறுக்காத ஆசை கொண்டு அடிமையாகிய நான் மனமகிழுமாறு தேரோடுகிற தெருக்களோடு கூடிய திருப்பெருந்துறையை உடையவன் திரு நடனம் பண்ணுவதனால் உண்டாகிற பேரின்பத்தைப் புகழ்ந்து பாடிப் பூவல்லி கொய்யாமோ?

பாடல் எண் : 19
அத்தி யுரித்தது
    போர்த்தருளும் பெருந்துறையான்
பித்த வடிவுகொண்
    டிவ்வுலகிற் பிள்ளையுமாம்
முத்தி முழுமுதலுத்
    தரகோச மங்கைவள்ளல்
புத்தி புகுந்தவா
    பூவல்லி கொய்யாமோ

யானையை உரித்து, அந்தத் தோலைப் போர்த் தருளிய திருப்பெருந்துறையை உடையான், பித்த வேடங் கொண்டு இந்த உலகத்தில் சிலர்க்குப் பிள்ளையுமாகி, முத்தி முழுமுதற் பொருளுமா, திருவுத்தரகோச மங்கையில் எழுந்தருளிய வள்ளலுமா இருக்கிறதனோடு அவன் என் மனத்துள் புகுந்த படியைப் புகழ்ந்து பூவல்லி கொய்யாமோ?

பாடல் எண் : 20
மாவார ஏறி
    மதுரைநகர் புகுந்தருளித்
தேவார்ந்த கோலந்
    திகழப் பெருந்துறையான்
கோவாகி வந்தெம்மைக்
    குற்றேவல் கொண்டருளும்
பூவார் கழல்பரவிப்
    பூவல்லி கொய்யாமோ

திருப் பெருந்துறையான், குதிரையைப் பொருந்த ஏறி, மதுரை நகரத்தில் புகுந்தருளி, தெய்வத்தன்மை பொருந்திய திருவுருவம் விளங்க, தலைவனாய் வந்து, எம்மை ஆட் கொண் டருளும், செந்தாமரை மலர் போலும் திருவடிகளைத் துதித்துப் பாடிப் பூவல்லி கொய்யாமோ?.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.