Thursday, June 12, 2014

as long as life exists in this body I shall meditate Lord Siva

Thirumurai 5.1

சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர்.
தேவியார் - சிவகாமியம்மை.

அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே. 5.001.1

பேரின்பவீடு நல்கும் தில்லைத் திருச்சிற்றம்பலம் பொன்னுலக வாழ்வையும் தரும். இத்தகைய திருச்சிற்றம்பலத்தை, மேலும் இந்நிலவுலகில் என் அன்பு பெருகும் வகையில் கண்டு, பரமுத்திப் பேரின்ப நிலையை எளிதின் எய்துதற்கு இந்த நல்ல மனிதப் பிறவியை இன்னும் கொடுக்குமோ முதல்வன்?

அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ
கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே. 5.001.2

அரும்புகள் நீக்கமுற ஆராய்ந்த போதுகளைக் கொண்டு வண்டுகள் நீக்கமுறத்தூவி, கரும்பாகிய வில்லை ஏந்திய கருவேளை எரித்தவனாகிய பெரும்பற்றப்புலியூர் எம்பிரானை நீர் தொழுமின்.

அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென்றயலவர்
சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே. 5.001.3

அரித்தல் மிக்க இருவினையால் தாக்குண்டு எரிசூழ (இடுகாட்டில்) கிடந்தார் என்று அயலோர் சிரிப்புற்றுப் பலபல பேசுதலை அடையுமுன்னரே நீவிர்போய்த் திருச்சிற்றம்பலத்தை அடைந்து உய்மின்.

அல்ல லென்செயும் அருவினை யென்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே. 5.001.4

எதிர்வினையும் தீர்தற்கரிய நுகர்வினையும் மேலைவல்வினையாகிய துவந்துவங்களும் எனக்கு என்ன துன்பம் செய்யவல்லன? தில்லைமாநகரிலே திருக்கூத்தாடியருளும் திருச்சிற்றம்பலவனார்க்கு அளவில்லாததொர் அடிமைபூண்ட எனக்கு அவ்வினைகள் ஒரு துன்பமும் செய்யவல்லன அல்ல.

ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான்நி லாவி யிருப்பனென் னாதனைத்
தேன்நி லாவிய சிற்றம் பலவனார்
வான்நி லாவி யிருக்கவும் வைப்பரே. 5.001.5

உடம்பில் உயிர் உயிர்த்துக்கொண்டிருக்கும் காலமெல்லாம் நான் என்னை ஆளாக உடைய திருச்சிற்றம்பலவனாரை விளக்கமுறப்பெற்றிருப்பேன். இன்பத்தேன் விளங்கிய அத்திருச்சிற்றம்பலவனார் அடியேனைப் பேரின்பவீட்டில் நிலைபெற்றிருக்கவும் வைப்பர்.

சிட்டர் வானவர் சென்று வரங்கொளும்
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச்
சிட்டர் பாலணு கான்செறு காலனே. 5.001.6

ஞானிகளும் தேவர்களும் போய்வேண்டும் வரங்களைப் பெற்றுக்கொள்ளும் சிறப்புடையது தில்லைச் சிற்றம்பலம்; சிட்டர்களாகிய அந்தணர்கள் வாழ்தற்கு இடமாவது அது. அத்தில்லைச் சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடியருளும் ஞானமூர்த்தியின் திருவடிகளைக் கைகூப்பித் தொழப்போகும் அச்சிட்டர்களாய மெய்ஞ்ஞானியரையே, ஏனையோரைச் செறுதற்கு வல்லகாலன் அணுக மாட்டான்.

ஒருத்த னார்உல கங்கட் கொருசுடர்
திருத்த னார்தில்லைச் சிற்றம் பலவனார்
விருத்த னாரிளை யார்விட முண்டவெம்
அருத்த னாரடி யாரை யறிவரே. 5.001.7

தனிமுதற்பொருள் உலகங்களுக்கெல்லாம் ஒரே விளக்காய் உள்ளவர்; செம்மையார்; தில்லைச்சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடுபவர்; முதியார்; இளையார்; நஞ்சுண்ட எம்செல்வர்; அடியாரை அறிவார்.

விண்நி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு
எண்நி றைந்த இருவர்க் கறிவொணாக்
கண்நி றைந்த கடிபொழி லம்பலத்
துள்நி றைந்துநின் றாடு மொருவனே. 5.001.8

யான் என்னும் செருக்கு மிகுந்த அயனும் மாலும் காண்டற்கு அரிதாய், ஆகாயத்தையளாவியெழுந்த சோதிப்பிழம்பு ஒப்பற்ற பெருந்தலைவனாய், தேனிறைந்த மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த தில்லையம்பலத்துள் திருச்சிற்றம்பல வடிவாய் நிறைந்து பஞ்சகிருத்திய நடனத்தைச் செய்யும். தொழக்கல்லாதவர்களாகிய அயன்மாலுக்கு அரிய முதல்வன் அன்பால் வழிபட்டவியாக்கிரர், பதஞ்சலியார் என்னும் முனிவர்களுக்கு வெளிப்பட்டுத் தோன்றித் தன்னியல்பை உணர்த்திப் பேரின்பம் அருளினன் என்றபடி.

வில்லை வட்டப் படவாங்கி யவுணர்தம்
வல்லைவட் டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை
ஒல்லைவட் டங்கடந் தோடுத லுண்மையே. 5.001.9

மேருவாகிய வில்லை வளைத்துத் திரிபுரத்தசுரர்களுடைய மும்மதில்களை அழித்தவன் எழுந்தருளிய தில்லை நகரின் திசையை நோக்கிக் கைகூப்புவார் செய்த வினைகள் விரைந்து அவர்ளை விட்டு ஓடும். இஃது உண்மை.

நாடி நாரணன் நான்முக னென்றிவர்
தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்
தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே. 5.001.10

திருமாலும் பிரமனும் முதல்வனைக் காண்பேம் எனத் தம்முள் எண்ணி முறையே நிலத்தை யகழ்ந்து தேடியும் வானிற் பறந்து திரிந்தும் காணவல்லாரல்லர்; மாடமாளிகைகள் சூழ்ந்த திருத்தில்லையில் திருவம்பலத்தில் நின்று ஆடுகின்ற பெருமானது திருவடிகள் அன்பால் நினையும் என் நெஞ்சத்து விளங்கி இருக்கும்.

மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்
சதுரன் சிற்றம் பலவன் திருமலை
அதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திற
மிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே. 5.001.11

இனிய மொழிபேசும் பார்வதி அம்மையை இடப்பாகத்தே வைத்தவன்; இளைப்பின்றி உலகெலாம் படைத்துக்காத்து அழிக்கவல்ல சதுரப்பாடுடையவன்; திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ளவன். இப் பெருமான் எழுந்தருளியுள்ள திருமலை எனப்படும் திருக்கயிலாய மலையை அசையும்படி, செருக்கினால் ஆரவாரம் செய்து எடுத்த இராவணனுடைய பத்து முடிகளும் வருந்தும்படி மௌள ஊன்றும் செம்மையான திருவடியைச் சென்று கைதொழுது உய்க.


tillaiciṟṟampalam will supply me food;
will give me gold.
over and above that.
having seen my desire to increase in intensity in this world will it still grant me this human birth to desire pleasure (from worshipping him).

one who destroyed the Kāmaṉ who has the harmful bow of sugar-cane.
our Lord who is in Perumpaṟṟappuliyūr gathering beautiful flowers so that even buds may not be available.
you worship (the Lord) by scattering the flowers (at his feet) to make the bees to suffer.

Being attacked by your action which grow you.
before your neighbours speak many words ridiculing you laughing at your ignorance that you were lying (as a corpse) to be consumed by fire.
People of this world!
you go to Tirucciṟṟampalam, and reach it and save yourself

to the Lord in Ciṟṟampalam in the big city of Tillai.
to me who became a servant which knows no time limit and from which I cannot redeem myself what effect can suffering have on me?
what harm can the action from which it is difficult to be freed, do to me?
what harm can the dual, old strong actions do to me?

as long as life exists in this body.
I shall meditate upon my Lord.
the Lord of Ciṟṟampalam where there are bright honey-combs.
will place me in heaven to stay there permanently if I wish it.

The esteemed one who resides in Ciṟṟampalam in Tillai where learned people live and where wise people and celestials go and receive their boons.
the god of death will not go.
near those people of good conduct who go to worship the red feet (of the Lord).

He is one without parallel.
He is the matchless light for all the worlds.
He is the pure person.
one who resides in Ciṟṟampalam in Tillai.
He is the aged elder.
He is the youth our Lord who has on his half Umā, and drank the poison, will know his devotees (and bestow his grace upon them).

the form of a hot fire which occupied completely the sky.
cannot be known by the two, (Brahmaṉ and Vishnu) who pervaded the minds of their devotees.
Having pervaded the ampalam surrounded by sweet-smelling gardens full of honey the unequalled one who dances there.

Having bent the bow to form a semi circle one who destroyed (in the twinkling of the eye) simultaneously the three circular forts of the Avuṇar (the destruction of Tiripuram) the actions of people who worship with their hands even the direction in which the surrounding area of Tillai lies.
It is quite true that they would flee quickly crossing their limits.

when the feet of the Lord who dances in the ampalam of Tillai surrounded by mansions having high storeys are in my mind.
Are these gods, Nāraṇaṉ and Nāṉmukaṉ who have thought about him in their minds and wandered and searched him to find, capable of seeing him?

one who has a young maid who speaks sweet and true words on one side of his form.
clever one one who is in Ciṟṟampalam to crush the ten heads of Rāvaṇaṉ who removed the mountain (Kailācam) and shook it will a roaring noise.
save yourselves by going on pilgrimage and reaching the red feet which trampled (upon them) Note: It is a distinguishing feature of Tirunāvukkaracu to mention the Rāvaṇaṉ anecdote in the last stanza of every patikam .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.